தெரு முனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் : கம்போங் கிளாம்

img-fluid

தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டம்

தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டத்தைத் தேசிய மரபுடைமைக் கழக அரும்பொருளகங்கள், மரபுடைமை நிலையங்கள், சமூகக் காட்சிக்கூடங்கள், அந்தந்த வட்டாரங்களின் கடை உரிமையாளர்கள் கூட்டிணைந்து செயல்படுத்துகின்றனர். சமூகத்துடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்தி, அன்றாடப் பயன்பாட்டிடங்களின் ஆழ்ந்த மரபுடைமை சிறப்பைப் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கம்பக்கங்களில் குறைந்தது 30 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள வட்டாரக் கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் அணுக்கமாகச் செயல்பட்டு, அந்தக் கடைகளின் தொழில் மற்றும் வர்த்தகத்தின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும்சிறு அரும்பொருளகங்களைக்கூட்டாக உருவாக்குவதற்கு இத்திட்டம் வழிகோலுகிறது. வட்டாரத் தளத்தில் அமைந்திருக்கும் இந்தக் காட்சிக்கூடங்களில், கடைகளின் கதைகளை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், கலைப்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

நிதியுதவி, கண்காட்சியைத் தொகுப்பதற்கான ஆதரவு, காட்சியமைப்புக்கு உதவி ஆகியவற்றை வழங்குவதோடு, உரைகள், உலாக்கள், பயிலரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்கும் வட்டாரக் கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் இணைந்து செயல்படும். அதோடு, சிங்கப்பூர் மரபுடைமை விழா, அந்தந்த அக்கம்பக்கங்களில் உள்ள மரபுடைமை நிலையங்களின் கலாசார விழாக்கள் போன்ற முக்கிய மரபுடைமைக் கழக நிகழ்ச்சிகளில் பங்குபெறவும் கடைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது.

காலங்காலமாக மனங்கவரும் இனிய பானம்: பாய் சர்பத் சிங்கப்பூர்

வெயிலான நாளில் தாகத்தைத் தணிக்கும் பழக்கப்பட்ட, எளிமையான பானம் தே சராபத் (தே ஹலியா என்றும் அறியப்படும்). இனிப்பும் இஞ்சியின் காரமும் கலந்த பானம் இது. பாய் சர்பத் கடை 1950களில் இருந்து தே சராபத் பானமும் மற்ற உள்ளூர் பானங்களும் விற்பனை செய்து வருகிறது. பேச்சுவழக்கில் ஃபிருஸ் என்றழைக்கப்பட்ட இந்தியக் குடியேறி இந்தப் பான வியாபாரத்தைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் பெச்சாக் (மலாய் மொழியில் “சைக்கிள் ரிக்‌ஷா” என்று அர்த்தம்) கடையாக நடத்தப்பட்ட பாய் சர்பத் கடை, 1970களில் ஒரு கடைவீட்டுக்கு மாறிச்சென்றது. தற்போதைய உரிமையாளர் முகம்மது அஸ்கர் 2018ல் தொழிலை வாங்கிக்கொண்ட போது, கடையின் பேச்சுவழக்குப் பெயரை வாடிக்கையாளர் ஒருவர் சொல்லக்கேட்டு, பாய் சர்பத் (ஹிந்தி, உருது மொழிகளில் “சர்பத் சகோதரர்”) எனக் கடைக்குப் பெயரிட்டார்.

இந்தக் கடையின் வெற்றிக்கு தே தாரிக், தே சராபத் பானங்களின் பிரபலமே காரணம். இரண்டுமே உயரத்திலிருந்து ஊற்றி “இழுக்கப்படும்” தேநீர் பானங்கள். தே சராபத் பானத்தில் இஞ்சி சாறு சேர்க்கப்படுவது வழக்கம். சராபத் என்ற சொல் ‌ஷர்பத் என்ற சொல்லிலிருந்து உருவானது. அரேபிய, பாரசீக, இந்தியக் கலாசாரங்களில், ‌ஷர்பத் என்பது இனிப்பான சீனிப்பாகு பானம். ஆயினும், சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் “இழுக்கப்படும்” இஞ்சி தேநீருக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது.

தே சராபத், தே தாரிக் இரண்டுமே கறுப்பு தேநீரும் கெட்டிப்பாலும் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன. பாய் சர்பத் கடையில் தேநீர் கலக்குபவர்கள், வெவ்வேறு “இழுக்கும்” உத்திகளைப் பயன்படுத்தி தத்தம் திறன்களை வெளிக்காட்டுகின்றனர். உத்திகளுக்கும் “இழுக்கும்” நீளத்திற்கும் ஏற்ப தேநீரின் சூடும் சுவையும் சற்று மாறுபடும். அதே சமயத்தில் மேலே அருமையான நுரை உருவாகும்.

வாடிக்கையாளர்களின் மாறிவரும் சுவைக்கேற்ப, கடையில் விற்பனையாகும் பானங்களின் எண்ணிக்கையை 12ல் இருந்து 120க்கும் மேலாகக் கூட்டியிருக்கிறார் அஸ்கர். அதோடு, தனது மகன் சாக்கியையும் அடுத்த தலைமுறை தேநீர் வித்தகராகச் சேர்த்திருக்கிறார். இன்றுவரை, வழக்கமான வாடிக்கையாளர்களும் புதியவர்களும் கடைக்கு வந்துகொண்டே இருக்கின்றனர்.

பல தலைமுறைகளாக நறுமணம் கமழும் அத்தர்: ஜமால் கசுரா அரொமெட்டிக்ஸ்

ஜமால் கசுரா அரொமெட்டிக்ஸ் 1933 முதல் பலவிதமான நறுமணங்களுடன் ஏராளமான வாசனைத்திரவியங்களைத் தயாரித்திருக்கிறது. முகமது ஹனிஃபா பின் முகமது ‌ஷரீஃப் என்பவர் கசுரா கம்பெனி என்ற பெயரில் இத்தொழிலைத் தொடங்கினார். அவர் தென்னிந்தியாவிலிருந்து ரியாவ் தீவு வழியாக சிங்கப்பூரில் குடியேறியவர்.

ஹனிஃபாவின் முதல் கடை 728 நார்த் பிரிட்ஜ் சாலை எனும் முகவரியில் அமைந்திருந்தது. ஆரம்பகால ஆண்டுகளில், புத்தகங்கள், நவரத்தினங்கள், ஆடைகள், வாசனைத்திரவியங்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை அவர் விற்பனை செய்தார். அவரது வாடிக்கையாளர்களில் பலரும் ஹஜ் யாத்ரீகர்களாகவும், அருகிலுள்ள சுல்தான் பள்ளிவாசலில் தொழுகைக்குச் செல்பவர்களாகவும் இருந்தனர்.

அவரது மகன் முகமது ஜமால் பின் முகமது ஹனிஃபா 1970களின் மத்தியில் தொழிலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, ஜமால் கசுரா அரொமெட்டிக்ஸ் எனப் பெயரை மாற்றி, வாசனைத்திரவியங்கள், நறுமணத் தைலங்கள், ஊதுவத்தி விற்பனையில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதோடு, அரபு மொழியில் அத்தர் எனப்படும் ஆல்கஹால் இல்லாத வாசனைத்திரவியங்களில் தனித்திறனை வளர்க்கத் தொடங்கினார். உலகெங்கிலும் வாழும் இஸ்லாமியச் சமூகங்களில், அத்தர் பல நூற்றாண்டுகளாக மதிப்புமிக்கப் பொருளாக நீடித்து வருகிறது. சில முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்பாக இந்த நறுமணங்களைப் பூசிக் கொள்வார்கள்.

குங்குமப்பூ, சந்தனமரம், சாம்பிராணி போன்ற நறுமணத் தைலங்களைப் பயன்படுத்தி, ஏராளமான தனித்துவமிக்க வாசனைத்திரவியங்களை ஜமால் உருவாக்கி இருக்கிறார். ஆக அதிகமாக விற்பனையாகும் “சிம்பனி”, “சுல்தான்” ஆகியனவும் அவரது கைவண்ணங்களே. இப்போது இத்தொழிலின் மூன்றாம் தலைமுறை மேலாளர்களாகப் பொறுப்பு வகிக்கும் ஜமாலின் பிள்ளைகள், பலவிதமான நறுமணங்களைப் பூசிக்கொண்டு பள்ளிக்குச் சென்றதை நினைவுகூர்ந்தனர். அவர்களது அப்பா தனது தயாரிப்புகளைப் பிள்ளைகளிடம் சோதித்துப் பார்ப்பார்.

1990களிலிருந்து, பல இன, பல சமய வாடிக்கையாளர்களின் மாறிவரும் விருப்பங்களுக்கு ஏற்ப வாசனைத்திரவியங்களின் வகைகளும் விரிவுபடுத்தப்பட்டன. சந்தனமர ஊதுவத்தி வாங்கும் பௌத்தர்களும் சாம்பிராணி வாங்கும் கிறிஸ்துவர்களும் வாடிக்கையாளர்களில் உள்ளடங்குவர். 2009ல், கடை நிறுவனரின் பேரனான ஜொஹாரி கசுரா, 42 அராப் ஸ்திரீட் எனும் முகவரியில் சிஃப்ர் அரொமெட்டிக்ஸ் கடையைத் திறந்தார். இந்தக் கடையில் இன்னும் பலவிதமான பிரத்யேக வாசனைத்திரவியங்களை வழங்கி, குடும்பத்தின் கைவினைக் கலையையும் புத்தாக்கத்தையும் அவர் கட்டிக்காக்கிறார்.

பாரம்பரிய உணவும், சமூகமும், வழக்கங்களும்: ரூமா மக்கான் மீனாங்

1980களின் துவக்கத்தில் தொடங்கப்பட்ட ரூமா மக்கான் மீனாங் உணவகம், சபர் மெனன்டி உணவகத்தின் வழித்தோன்றல்களில் ஒன்றாகும். ரூமா மக்கான் மீனாங்கின் உரிமையாளர் சுல்பைடா பிந்தி மார்லியன், தனது வளரும் பருவத்தில் குடும்பத்தினர் நடத்திவந்த சபர் மெனன்டி கடையில் வேலை செய்து அனுபவம் பெற்றார். மீனாங்கபாவ் கலாசாரத்தில் போற்றப்பட்ட சுதந்திரமாகச் செயல்படும் மன உரமிக்கப் பெண்களில் ஒருவராகத் தனது தாயார் ஹாஜா ரோஸ்மா பிந்தி மய்லு திகழ்ந்ததை அவர் நேரில் பார்த்திருக்கிறார். அவரது பாதையில் பின்தொடர்ந்த சுல்பைடா, தனது கணவர் முகமது சின் பின் ஹருனுடன் சேர்ந்து, ரூமா மக்கான் மீனாங் எனும் நாசி பாடாங் உணவகத்தைச் சொந்தமாகத் தொடங்கினார்.

நாசி பாடாங் உணவுக்கலையின் முக்கியமான ஒரு பதார்த்தம் மாட்டிறைச்சி ரெண்டாங். மாட்டிறைச்சி, சுவைப்பொருட்கள், தேங்காய் சேர்த்து பல மணிநேரம் வேக வைக்கும் இந்த உணவு மீனாங்கபாவ் மக்களிடமிருந்து தோன்றியதாக இருந்தாலும், மற்ற வட்டார உணவுக்கலைகளுக்கு ஏற்ப மாற்றமடைந்துள்ளது. ரூமா மக்கான் மீனாங்கின் ரெண்டாங், ரொஸ்மா பிறந்த ஊரான மேற்கு சுமத்ராவின் சுங்காய் லீமாவில் பரிமாறப்படும் அதிக உலர்வான, தித்திப்பான பாணியில் இருக்கிறது.

உணவகத்தின் மற்ற பிரபலமான உணவு வகைகளில் ஆயாம் பெலாடோ ஹீஜாவ் (பொரித்த கோழியுடன் பச்சைநிற சம்பால் பெலாடோ), பாரு பெலாடோ மேரா (பொரித்த பசுமாட்டு நுரையீரலுடன் சிவப்புநிற சம்பால் பெலாடோ) போன்றவை உள்ளடங்கும். இவ்விரு உணவு வகைகளும் மீனாங்கபாவ் உணவுக்கலையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் கொரகொரப்பான சம்பால் பெலாடோ மிளகாய்ச் சாந்துடன் சமைக்கப்படுகின்றன. கெரிசிக் (வறுத்த தேங்காய் விழுது) பயன்படுத்தாமல் தேங்காய்ப் பாலும் தேங்காய்ப்பூவும் பயன்படுத்துவது மீனாங்கபாவ் உணவுக்கலையின் மற்றொரு தனித்துவம்.

ரூமா மக்கான் மீனாங்கின் மேற்காணும் சமையல் உத்திகளும் சமையல் குறிப்புகளும், ஹாஜா ரோஸ்மா, ஹாஜி மார்லியன் தம்பதியரில் தொடங்கி, சுல்பைடா, சின் தம்பதியர் வழியாக, அவர்களது பிள்ளைகள் ஹஸ்மி, ‌ஷஹிடா, அரிஃப், நஸ்ரி ஆகியோரைச் சென்றடைந்து மூன்று தலைமுறைகளாகத் தொடர்கின்றன. இவர்களது பொறுப்பின்கீழ், உணவின் தரத்தை உறுதிப்படுத்த மத்திய சமையலறை திறக்கப்பட்டது. அதோடு, 2017ஆம் ஆண்டு தெம்பனிஸில் புதிய கிளை தொடங்கப்பட்டது. இவர்களது ரெண்டாங், ‌ஷங்கிரிலா ஹோட்டலின் பாரம்பரிய உணவுப்பட்டியலிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால், அதன் சமையல் குறிப்பு குடும்ப இரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.

மரபுவழிவந்த நாசி பாடாங்: சபர் மெனன்டி

சிங்கப்பூரின் ஆகப் பிரபலமான நாசி பாடாங் உணவகங்களில் ஒன்றின் மரவுவழிவந்த இந்த உணவகம், 1997ல் சபர் மெனன்டி II என்ற பெயரில் தொடங்கப்பட்டது. முதல் உணவகத்தை நிறுவிய ஹாஜி மார்லியன் பின் அதர், ஹாஜா ரோஸ்மா பிந்தி மய்லு தம்பதியின் மூத்த மகளான மார்யுலிஸ் பகிண்டோர் பிந்தி மார்லியன் இந்த உணவகத்தைத் தொடங்கினார்.

சபர் மெனன்டி 1920களில் பெயரிடப்படாத வீதியோரக் கடையாகத் தொடங்கப்பட்டது. கல்லறைக்கல் செய்யும் கடைக்குப் பக்கத்தில் இந்தக் கடை அமைந்திருந்ததால், ஒரு காலத்தில் நாசி பாடாங் பத்து நிசான் (மலாய் மொழியில் “கல்லறைக்கல் நாசி பாடாங்” என்று அர்த்தம்) எனப் பேச்சுவழக்கில் அழைக்கப்பட்டது. ஹாஜி மார்லியனின் நண்பர் ஒருவர் முன்னதாக இருந்த உணவகத்தின் பெயர்ப் பலகையை 1960களில் அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்த போதுதான் சபர் மெனன்டி என்ற பெயர் கடைக்குச் சூட்டப்பட்டது. மலாய் மொழியில் சபர் மெனன்டி என்றால் “பொறுமையாகக் காத்திரு” என்று அர்த்தம்.

மார்யுலிஸ் தனது இளவயதில் உடன்பிறப்புகளுடன் சேர்ந்து அடுப்புக்கு விறகுக்கட்டை சேகரிப்பார். அதோடு, சுல்தான் கேட் அருகிலுள்ள பொது நிலைக்குழாயிலிருந்து தண்ணீரும் எடுத்துச் செல்வார். அவரது பெற்றோர் சமையலைக் கவனித்துக் கொண்டார்கள். 1990களுக்குள், இந்தத் தொழில் கம்போங் கெலாமில் ஆறு உணவகங்களாக விரிவடைந்திருந்தது. அவை ஒவ்வொன்றும் மார்லியன் குடும்பத்தின் இரண்டாம் தலைமுறையினரால் நடத்தப்பட்டன. 

பாரம்பரிய சுவைகளைப் பாதுகாப்பதில் பெருமை கொள்ளும் சபர் மெனன்டி, நிலக்கரியில் வாட்டுதல், பாரம்பரிய சுவைப்பொருட்களைப் பயன்படுத்துதல் போன்ற உத்திகளின் மூலம் மீனாங்கபாவ் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. அவர்களது ரெண்டாங், ஈகான் பக்கார் (வாட்டிய மீன்), ஆயாம் குலாய் (பாடாங் பாணி கோழிக் கறி) ஆகியவற்றில் இந்த உத்திகள் புலப்படுகின்றன.

இன்று, புதிய தலைமுறை வாடிக்கையாளர்களைக் கவர முற்படுகையிலும் சபர் மெனன்டி பாரம்பரியம் மாறாமல் நீடிக்கிறது. மார்யுலிஸின் மகன் முகமது இஸஹர் தம்புனான் பொறுப்பேற்றுக் கொண்டபோது, தற்போது செயல்பட்டுவரும் ஒரே சபர் மெனன்டி உணவகம் இதுதான் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் உணவகத்தின் பெயரை மாற்றினார். அதோடு, உணவகத்தின் அலங்கரிப்பையும் புதுப்பித்து, உணவு விநியோகச் சேவையையும் தொடங்கினார். இதற்கிடையே, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் உணவகத்தின் நாசி பாடாங் உணவு வகைகளுக்குப் பாரம்பரிய சமையல் முறைகளையும் சமையல் குறிப்புகளையும் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். 

சிறுபொருட்களின் குவியம்: சின் ஹின் சுவான் கீ

சின் ஹின் சுவான் கீ கடை, பல தலைமுறை வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து வளர்ந்திருப்பதாக அதன் உரிமையாளர்கள் அடிக்கடி சொல்வார்கள். சீனாவின் குவான்ஜாவ் வட்டாரத்திலிருந்து சிங்கப்பூரில் குடியேறிய இங் கூன் டெங் எப்னவர் 1965ல் கடையைத் தொடங்கினார். குடும்பத்தினரால் நடத்தப்பட்ட இந்தச் சிறுபொருள் கடையும், வர்த்தகத் தொழிலும் நல்ல வளர்ச்சி கண்டது. ஒரு வர்த்தக மையமாக சிங்கப்பூருக்குக் கிடைத்த ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்புகள் இதற்கு ஒரு காரணம்.

வர்த்தக நிறுவனம் ஒன்றில் வேலை செய்த இங், 47 கிளைட் ஸ்திரீட் எனும் முகவரியில் சின் ஹின் சுவான் கீ டிரேடிங் கம்பெனியை அமைத்தார். “சுவான் கீ” என்ற பெயர் ஹாக்கியன் மொழியில் “நினைவில் நிற்கும் குவான்(ஜாவ்)” என மொழிபெயர்ப்பாகும். இது அவரது குடும்பத்தின் சொந்த ஊரைக் குறிக்கிறது. சிங்கப்பூரின் மறுஏற்றுமதி, வர்த்தக மையத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, நூல், சரிகை, பொத்தான், பலவித இணைப்பொருட்கள் போன்றவற்றைத் தொழிற்சாலைகள், தையல்காரர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் இங் விற்றார். கிளைட் ஸ்திரீட் 1970களில் மறுமேம்பாட்டுக்கு உள்ளானபோது, கம்போங் கெலாமுக்கு கடை மாறிச்சென்றது.

தொழில்முனைப்புமிக்க இங்கும் அவரது குடும்பத்தாரும், 1960களிலும் 1970களிலும் ஆசியா முழுவதிலிருந்து விநியோகிப்பாளர்களைத் தேடிப்பிடித்து, சீனாவின் ஃபிளாயிங் வீல் தையல் நூல், பிற்பாடு ஜப்பானின் YKK ஸிப்பர்கள் போன்ற பொருட்களை வர்த்தகம் செய்தனர். இவ்விரு பொருட்களும் அவர்களது விநியோகத் தொழிலின் முக்கிய கூறுகளாக உருவாயின. இங்கின் வாரிசுகளான மகன்கள் இங் சியாவ் போ, இங் சியாவ் கொக், மற்ற உடன்பிறப்புகள் அனைவரும் சேர்ந்து, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மற்றும் இதர நாடுகளில் புதிய வாடிக்கையாளர்களைத் தேடிப்பிடித்து தொழிலை விரிவுபடுத்தினார்கள்.

1970கள் முதல் 1980கள் வரை நீடித்த பொருளியல் வளர்ச்சியின்போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் கடைக்கு வெளியில் வரிசையில் காத்திருந்து, ரொக்கப்பணம் கொடுத்து YKK ஸிப்பர்களையும் மற்ற இணைப்பொருட்களையும் அதிகளவில் வாங்கினர். அதன்பின்னர் கடை ஊழியர்கள் பொருட்களை போட் கீ-க்கு எடுத்துச்சென்று உலகெங்கிலும் கப்பலில் அனுப்பி வைத்தனர், அல்லது பல்வேறு இடங்களுக்குச் சென்று விநியோகம் செய்தனர். 

2000ஆம் ஆண்டுகளிலிருந்து, கடை நிறுவனரின் பேரன்கள் ஏட்ரியன் இங், கென்னி இங் உள்ளிட்ட இங் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினர், தொழிலின் சில்லறை விற்பனையை விரிவுபடுத்தி, இணையத்தில் கடை தொடங்கினர். இந்த மாற்றங்களும், மற்றவையும், சின் ஹின் சுவான் கீ தொழிலைக் கட்டிக்காக்கவும், புதிய தலைமுறை வாடிக்கையாளர்களைக் கவரவும் உதவியுள்ளன.

கம்போங் கெலாம் முதல் ஹஜ் வரை: வி.எஸ்.எஸ். வருசை முகமது அண்ட் சன்ஸ்

வி.எஸ்.எஸ். வருசை முகமது அண்ட் சன்ஸ், 1935 முதல் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு ஹஜ் புனித யாத்திரைக்குப் பயன்படும் பல்வேறு பொருட்களை வழங்கி வருகிறது. இந்தத் தொழிலைத் தொடங்கியவர் வளநாடு சின்னகனி சயிடா முகமது வருசை முகமது. இந்தியாவின் திருச்சிராப்பள்ளியில் பிறந்த இவர், மியன்மாரின் ரங்கூன் வழியாக சிங்கப்பூரை வந்தடைந்தார்.

வருசை முகமது ஆரம்பத்தில் கம்போங் கெலாமில் காலுறைகள் விற்பனை செய்தார். அதன்பின்னர், அருகிலிருந்த கிராஃபர்ட் கோர்ட் வட்டாரத்தில் தொழிற்சாலை அமைத்து, எஃகு பயணப் பெட்டிகளும் குடைகளும் உற்பத்தி செய்தார். ஆயினும், ஹஜ் பயணிகள் பயன்படுத்தும் பயன்மிகு இடைவாரே ஆகப் பிரபலமான தயாரிப்பாக இருந்தது. இந்த இடைவார், மலாய் பேச்சுவழக்கில் தாலி பிங்காங் ஹாஜி அல்லது பச்சை இடைவார் என்றழைக்கப்படுகிறது.

ஹஜ் யாத்திரை செல்வோர், இறைவனின் பார்வையில் எல்லா முஸ்லிம்களும் சமமே என்பதைக் குறிக்கும் வகையில், இஹ்ரம் எனும் தைக்கப்படாத நீள் அங்கிகளை அணிவார்கள். வருசை முகமது ஹஜ் யாத்திரை சென்றபோது, யாத்ரீகர்கள் பலரும் பணப்பைகளையும் மற்ற உடமைகளையும் இஹ்ரத்தில் கட்டிவைக்க பல்வேறு உத்திகளைக் கையாளுவதைக் கண்டார். அப்போதுதான், பணத்தையும் மற்ற அத்தியாவசியப் பொருட்களையும் எடுத்துச்செல்வதற்கு இடைவார் வடிவமைக்கும் யோசனை அவருக்குத் தோன்றியது.

வருசை முகமது 1935ல் மக்கா சம் சம் இடைவாருக்கு யுனைடெட் கிங்டத்தில் காப்புரிமை பெற்று, தரமான பொருட்களைக் கொண்டு சிங்கப்பூரில் இடைவாரை உற்பத்தி செய்யத் தொடங்கினார். வியாபாரம் உச்சத்தில் இருந்தபோது, ஒவ்வோர் ஆண்டும் மத்திய கிழக்குக்கு சுமார் 60,000 இடைவார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வருசை முகமதுவின் இடைவாரையும் மற்ற ஹஜ் பொருட்களையும் வாங்குவோரில் சிங்கப்பூர், மலேசிய, இந்தோனீசிய யாத்ரீகர்கள் உள்ளடங்குவர். அவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்லும்போது அல்லது அங்கிருந்து திரும்பி வரும்போது கம்போங் கெலாமில் இவரது கடைக்குச் செல்வார்கள்.

இந்தக் குடும்பத் தொழிலின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர், கம்போங் கெலாமில் நீடித்து நிலைத்து, இஹ்ரம் ஆடை, ஊதுவத்தி, வாசனைத்திரவியம் உள்ளிட்ட பலதரப்பட்ட பொருட்களுடன் தொழிலை விரிவாக்கியுள்ளனர். குறிப்பாக, ஊதுவத்தி, வாசனைத்திரவியம் ஆகிய இரு பொருட்களும் பல கலாசாரங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களைக் கவர வருசை முகமதுவுக்கு உதவியுள்ளன.

நிலக்கரியும் சுவைப்பொருட்களும் கலந்த பாரம்பரியம்: வாரோங் நாசி பரியமான்

இந்தோனீசியா, சிங்கப்பூர், மலேசியா ஏகிலும் மாட்டிறைச்சி ரெண்டாங் பிரபலமான உணவாகத் திகழ்வதற்கு மீனாங்கபாவ் மக்களின் மெரன்டாவ் அல்லது மரபுவழி குடியேற்றப் பாரம்பரியம் காரணமாகக் கூறப்படுகிறது. குறைவான அனலில் பல மணிநேரம் சமைக்கப்படும் சுவைமிகு ரெண்டாங், மீனாங்கபாவ் குடியேறிகளுக்குச் சொந்த ஊரை நினைவூட்டும் உணவாகத் திகழ்கிறது. இந்த ரெண்டாங்கும், மற்ற விருப்பமான நாசி பாடாங் உணவு வகைகளும் பல்லாண்டு காலமாக வாரோங் நாசி பரியமான் கடையில் பரிமாறப்பட்டு வருகின்றன. 

இஸ்ரின் பின் இப்ராஹிமும் அவரது மனைவி ரோஸ்னா பிந்தி சைனால் அபிதினும் தொடங்கிய வாரோங் நாசி பரியமான், 1948 முதல் இந்த நார்த் பிரிட்ஜ் சாலை கடையில் நாசி பாடாங் (மீனாங் சமையற்கலை என்றும் அறியப்படும்) விற்பனை செய்து வருகின்றனர். இஸ்ரினும் அவரது குடும்பத்தாரும் 1940களில் சிங்கப்பூரில் குடியேறினார்கள். ஆரம்பத்தில் வீதியோரக் கடை நடத்தி வந்த அவர், பிற்பாடு ஒரு கடைவீட்டை வாடகைக்கு எடுத்து, இந்தோனீசியாவின் மேற்கு சுமத்ராவில் இருந்த அவர்களது சொந்த ஊரான பரியமானின் பெயரைக் கடைக்கு வைத்தனர். 

தரமான உணவுப்பொருட்கள், சமையல் முறைகள், பரிமாறும் முறை ஆகியவற்றுக்கு இஸ்ரின் கொடுத்த முக்கியத்துவம், 21ஆம் நூற்றாண்டிலும் வாரோங் நாசி பரியமானுக்கு வழிகாட்டுகிறது. அவரது பிள்ளைகள் சுதிர்மான், ஜும்ரின், முனாஃப், நஸ்ரின் இப்போது பொறுப்பேற்று நடத்திவரும் இந்த உணவகத்தின் சிறப்புவாய்ந்த நாசி பாடாங் உணவு வகைகளில் மாட்டிறைச்சி ரெண்டாங் (வதக்கல்), ஆயாம் பக்கார் (வாட்டிய கோழி), குலாய் நங்கா (பலாக்காய் குழம்பு) குறிப்பிடத்தக்கவை.

ரெண்டாங்கும் ஆயாம் பக்காரும் மீனாங்கபாவ் கலாசாரத்தின் பாரம்பரிய சமையல் முறைகளைப் பிரதிபலிக்கும் உணவு வகைகள். நிலக்கரி அடுப்பில் பல மணிநேரம் வேக வைக்கப்படும் ரெண்டாங்கில், ரெம்பா (மசாலைப்பொருள் சாந்து), தேங்காய்ப்பால், வெங்காயம், எலுமிச்சைப்புல் (செராய்), கஃபிர் எலுமிச்சை இலை ஆகியன சேர்க்கப்படுகின்றன. ஆயாம் பக்கார் செய்வதற்கு, கோழியை முதலில் தேங்காய்ப்பால் குழம்பில் சமைப்பார்கள். அதன்பிறகு நிலக்கரி அடுப்பில் வாட்டுவார்கள். இவ்விரு உணவு வகைகளிலும் உள்ள லேசான புகைச் சுவை வாடிக்கையாளர்களை ஈர்க்கிறது.

21ஆம் நூற்றாண்டில், இஸ்ரினின் பேத்தி யாந்தி சுலாஸ்ட்ரி எம்ரின், குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினராக இத்தொழிலில் ஈடுபட்டுள்ளார். கம்போங் கெலாமில் நீண்டகாலமாக நீடித்துவரும் மற்ற நாசி பாடாங் உணவகங்களுடன், வாரோங் நாசி பரியமானும் இவ்வட்டாரத்தில் மீனாங்கபாவ் சமையல்கலை பாரம்பரியத்தைத் தொடர்ந்து கட்டிக்காத்து வருகிறது.

GameOn Nila Jejak Warisan Edition

GameOn Nila Jejak Warisan Edition

Click here to download the app.


GameOn Nila Jejak Warisan III

 
close button
hhlogo