தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடம்: சைனாடவுன்

img-fluid

தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டம் 

தெருமுனை மரபுடைமைக் காட்சிக்கூடங்கள் திட்டத்தைத் தேசிய மரபுடைமைக் கழக அரும்பொருளகங்கள், மரபுடைமை நிலையங்கள், சமூகக் காட்சிக்கூடங்கள், அந்தந்த வட்டாரங்களின் கடை உரிமையாளர்கள் கூட்டிணைந்து செயல்படுத்துகின்றனர். சமூகத்துடனான பங்காளித்துவத்தை வலுப்படுத்தி, அன்றாடப் பயன்பாட்டிடங்களின் ஆழ்ந்த மரபுடைமை சிறப்பைப் பற்றிய விழிப்புணர்வை வளர்ப்பது இத்திட்டத்தின் நோக்கம். 

தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கம்பக்கங்களில் குறைந்தது 30 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள வட்டாரக் கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் அணுக்கமாகச் செயல்பட்டு, அந்தக் கடைகளின் தொழில் மற்றும் வர்த்தகத்தின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் “சிறு அரும்பொருளகங்களைக்” கூட்டாக உருவாக்குவதற்கு இத்திட்டம் வழிகோலுகிறது. வட்டாரத் தளத்தில் அமைந்திருக்கும் இந்தக் காட்சிக்கூடங்களில், கடைகளின் கதைகளை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள், புகைப்படங்கள், கலைப்பொருட்கள் ஆகியன காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். 

நிதியுதவி, கண்காட்சியைத் தொகுப்பதற்கான ஆதரவு, காட்சியமைப்புக்கு உதவி ஆகியவற்றை வழங்குவதோடு, உரைகள், உலாக்கள், பயிலரங்குகள் போன்ற நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்கும் வட்டாரக் கடை உரிமையாளர்களுடன் தேசிய மரபுடைமைக் கழகம் இணைந்து செயல்படும். அதோடு, சிங்கப்பூர் மரபுடைமை விழா, அந்தந்த அக்கம்பக்கங்களில் உள்ள மரபுடைமை நிலையங்களின் கலாசார விழாக்கள் போன்ற முக்கிய மரபுடைமைக் கழக நிகழ்ச்சிகளில் பங்குபெறவும் கடைகளுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. 

மனிதகுலத்திற்கு மருத்துவப் பராமரிப்பு: யூ யான் சாங்

யூ யான் சாங்கின் கதை 1873-ல் தொடங்கியது. அந்த ஆண்டில்தான், சீனாவின் குவாங்டோங் மாநிலத்தைச் சேர்ந்த குடியேறி யூ கொங், மலாயாவின் பேராக் மாநிலத்தை வந்தடைந்தார். ஈயச் சுரங்கத் தொழிலாளிகள் தங்களது உடல் வலியைப் போக்க அபினை அடிக்கடி நாடுவதை அவர் கவனித்தார். 

பாரம்பரியச் சீன மருந்துகளால் வலியைக் கட்டுப்படுத்தவும் நோய்களைக் குணப்படுத்தவும் முடியும் என்ற நம்பிக்கையுடன், 1879-ஆம் ஆண்டு கோபெங்கில் ஒரு மருந்துக் கடையைத் திறந்தார் யூ. அதற்கு “யாங் சாங்” என்று அவர் பெயரிட்டார். இதற்கு கென்டனீஸ் மொழியில் “மனிதகுலத்திற்குப் பராமரிப்பு” என்று அர்த்தம். 

யூ கொங் காலமான பிறகு, அவரது மகன் யூ டொங் சென், 21 வயதில் பொறுப்பேற்றார். தொழிலறிவுமிக்க டொங் சென், குடும்பத்தின் வர்த்தகத்தை, பாரம்பரிய மருந்துத் தொழிலிலிருந்து, ஈயச் சுரங்கங்கள், ரப்பர் தோட்டங்கள், சொத்துடைமைகள் என விரிவுபடுத்தினார். ஈயச் சுரங்கத் தொழிலாளிகளை அபின் புழக்கத்திலிருந்து விடுவிப்பதில் உறுதியாக இருந்த அவர், தனது ஈயச் சுரங்கங்களுக்கு அருகிலேயே மருந்துக் கடைகளை அமைத்து, தொழிலாளிகளுக்கு மருத்துவப் பராமரிப்பு வழங்கினார். 

“யூ யான் சாங்” எனப் பெயர் மாற்றப்பட்ட குடும்பத்தின் பாரம்பரியச் சீன மருந்துத் தொழில், 1910-களுக்குள், சிங்கப்பூர், ஹாங்காங், தென் சீனா ஆகியவற்றுக்கும் விரிவடைந்தது. சிங்கப்பூரின் முதல் யூ யான் சாங் மருந்துக் கடை 1910-ஆம் ஆண்டு 265-271 சவுத் பிரிட்ஜ் சாலையில் திறக்கப்பட்டது. கட்டுப்படியாகும் விலையில் சுகாதாரப் பராமரிப்பும் மருந்துப் பொருட்களும் வழங்கிய யூ யான் சாங் மருந்துக் கடைகள், பணம் அனுப்பும் சேவைகளையும் வழங்கின. கடையின் உதவியாளர்கள், எழுதப்படிக்கத் தெரியாத குடியேறிகள் கடிதங்களைப் படிக்கவும் எழுதவும் உதவி செய்தனர். 

இன்று, யூ யான் சாங் இந்த வட்டாரத்தில் 200-க்கும் மேற்பட்ட கடைகளையும் மருந்தகங்களையும் நடத்துகிறது. பாரம்பரிய மருந்துகளுடன் மனிதகுலத்தைப் பராமரிக்க விரும்பிய கடை நிறுவனரின் குறிக்கோளை யூ யான் சாங் தொடர்கிறது. 

பாரம்பரிய பக் குவா சுவை: லிம் சீ குவான்

 

விழாக்காலங்களில் நீளமான வரிசைகள் காணப்படும் லிம் சீ குவான், 1920-களில் சீனாவின் ஃபூஜியன் மாநிலத்திலிருந்து வந்த லிம் கே எங் என்பவரால் நிறுவப்பட்டது. தன்னை மருத்துவராகப் பார்க்க விரும்பிய பெற்றோரின் ஆசைகளை மீறி, தோட்டங்களிலும் கடைகளிலும் பாடுபட்டு உழைத்து பணம் சேமித்தார் லிம். அந்தப் பணத்தைக் கொண்டு, பக் குவா (அனலில் வாட்டிய மாமிசத் துண்டுகள்) விற்கும் தள்ளுவண்டித் தொழிலை 1938-ல் சின் சியூ சாலையில் தொடங்கினார். 

லிம் தனது தொழிலுக்கு “சீ குவான்” என்று பெயரிட்டார். இதற்கு சீன மொழியில் “இலட்சியமும் நேர்மையும்” என்று அர்த்தம். தனது பாட்டியின் சமையல் குறிப்பைப் பயன்படுத்தி பக் குவா தயாரித்த லிம், மாமிசம் ஊறவைக்கப்பட்ட கலவையை உள்ளூர் சுவைக்கேற்ப மாற்றியமைத்தார். பக் குவா தயாரிப்பு முறையையும் பல்வேறு விதமாகச் சோதித்துப் பார்த்தார். மாமிசத்தை வெயிலில் காயவைத்து, நிலக்கரித் தணலில் வாட்டி, தனித்துவமான புகைச் சுவையைச் சேர்ப்பது அதில் ஒன்று.

1956-ல், நியூ பிரிட்ஜ் சாலையில் அமைந்திருந்த வாடகைக் கடைவீட்டுக்கு லிம் மாறிச்சென்றார். அந்தக் கடையில் பாதி பக் குவா தயாரிப்புக்கும், மறுபாதி வியாபாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டன. லிம்மும் அவரது குடும்பத்தினரும் ஓய்வு நேரத்தில் பெரும்பகுதியைக் கடையிலேயே செலவழித்தனர். குடும்பத் தொழிலுக்குத் துணைபுரியும் இந்தப் பாரம்பரியத்தை, லிம் குடும்பத்தினரின் இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் இன்றுவரை கடைப்பிடிக்கின்றனர். இவர்களே இப்போது தொழிலை நடத்தி வருகின்றனர். 

லிம் சீ குவான் இன்றுவரை நீண்டகால வாடிக்கையாளர்களின் இதயத்தில் சிறப்பிடம் பெற்றிருக்கிறது. அவர்களில் பலரும் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. இந்தக் கடையின் பக் குவா வாங்குவதற்காக வரிசையில் காத்திருப்பதை சீனப் புத்தாண்டு பாரம்பரியமாகவே கருதுகின்றனர். 

 

வெள்ளி முதல் பெரனக்கான் நகைகள் வரை: கிம் போ ஹொங் கோல்டுஸ்மித்

கிம் போ ஹொங் கோல்டுஸ்மித் நகைக்கடை, 80 ஆண்டுகளுக்குமேல் பல தலைமுறை வாடிக்கையாளர்களுக்காக நகைகளை வடிவமைத்து விற்பனை செய்து வருகிறது. சீனாவின் கின்மென் வட்டாரத்திலிருந்து சிங்கப்பூருக்கு வந்த வெள்ளித்தட்டான் டான் எங் கியோக், 58 சீனா சாலை எனும் முகவரியில் 1938-ல் நகைக்கடைத் தொழிலைத் தொடங்கினார்.

ஆரம்பகால ஆண்டுகளில், உள்ளூர் மொத்த வியாபாரிகளிடமிருந்து பெறப்பட்ட வெள்ளி நகைகளையும், டான் கையால் வடிவமைத்த நகைகளையும் கிம் போ ஹொங் விற்றது. அதன் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் ஹோக்கியன் மொழி பேசுபவர்கள். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அணிவிக்கும் வெள்ளித் தாயத்துகள், காலமானவர்களுடன் அடக்கம் செய்யும் ஆபரணங்கள் போன்ற சிறப்புப் பொருட்களை வாங்குவதற்காக, வாடிக்கையாளர்கள் பலரும் கிம் போ ஹொங் கடைக்கு அடிக்கடி சென்றனர். தங்க நகைகளும் கடையில் விற்கப்பட்டன. குறிப்பாக, ஹோக்கியன் வாடிக்கையாளர்கள் விரும்பிய செம்பொன் நகைகள்.

1943-ல், டானும் சில நண்பர்களும் சேர்ந்து, நார்த் பிரிட்ஜ் சாலையில் போ ஹுவாட் கோல்டுஸ்மித் நகைக்கடையைத் தொடங்கினார்கள். 1950-களுக்குள், இரு கடைகளும் பிரத்யேக நகை வடிவமைப்புத் திறன்களுக்குப் பெயர்பெற்று விளங்கின. போ ஹுவாட் கடைக்கு மலாய், இந்திய, நோன்யா வாடிக்கையாளர்கள் அதிகமாகச் சென்றனர். அவர்களில் பலரும் அந்த வட்டாரத்தில் வாழ்ந்தவர்கள்.

போ ஹுவாட் கோல்டுஸ்மித் கடையின் நிறுவனர்கள் 1971ல் ஓய்வுபெற்றபோது, அந்தக் கடையை டான் குடும்பத்தினர் வாங்கிக்கொண்டு, பிற்பாடு கிம் போ ஹொங் கடையுடன் இணைத்தனர். சீனா சாலை 1990-களில் சீரமைக்கப்பட்டபோது, கிம் போ ஹொங் இடம்பெயர்ந்தது. முடிவில், 2002-ல் பிக்கரிங் சாலையில் நிரந்தர இடத்தை அமைத்துக்கொண்டது.

இன்று, டான் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினர் கிம் போ ஹொங் கடையை நடத்துகின்றனர். எனாமல், பெரனக்கான் நகை வடிவமைப்பில் தமக்கென தனி அடையாளத்தை கிம் போ ஹொங் உருவாக்கிக் கொண்டுள்ளது.  

 

உள்ளூர் சுவைக்கேற்ற கென்டனீஸ் உணவு வகைகள்: ஸ்பிரிங் கோர்ட் உணவகம்

சிங்கப்பூரின் ஆகப் பழமையான உணவகங்களில் ஒன்று ஸ்பிரிங் கோர்ட். லாரி ஓட்டுநராக இருந்த ஹோ லோக் யீ என்பவர், 1929-ல் கிரேட் வோர்ல்டு கேளிக்கை வளாகத்தில் இந்த உணவகத்தைத் தொடங்கினார்.

ஆரம்பத்தில் “விங் சூன் யுவென்” (கென்டனீஸ் மொழியில் “வசந்தகாலத் தோட்டத்தில் பாடுதல்” என்று அர்த்தம்) எனப் பெயரிடப்பட்ட இந்த உணவகம், உள்ளூர் சுவைக்கேற்ற கென்டனீஸ் உணவு வகைகளுக்குப் பெயர்பெற்று விளங்கியது. மலாய், இந்திய, ஹோக்கியன், தியோச்சூ உணவு வகைகளில் சேர்க்கப்படும் மிளகாய், கறி மசாலைத்தூள் போன்றவற்றைப் பயன்படுத்தி அவை சமைக்கப்பட்டன. பாரம்பரியக் கென்டனீஸ் உணவு வகைகளுடன் ஒப்பிடுகையில் அவற்றின் சுவை அதிகம்.

1930-கள் முதல் 1960-கள் வரை, மேன்மக்கள், பிரமுகர்கள், சங்கங்கள், புதுமணத் தம்பதிகள் பலரும் விழாக்கால விருந்துக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்ற உணவகம் விங் சூன் யுவென். அங்கிருந்த நூறு மேசைகளுடன், ஒரே இரவில் மூன்று அல்லது நான்கு திருமண விருந்துகளை உணவகம் அடிக்கடி நடத்தியது. தொழில் விறுவிறுப்பாக நடந்ததால், ஹோ பல சமயங்களில் உணவகத்திலேயே மேசைகள்மீது படுத்துத் தூங்க வேண்டியிருந்தது.

ஆனால், 1970-களுக்குள், கிரேட் வோர்ல்டு வளாகத்திற்கு வருகை அளித்தோரின் எண்ணிக்கை குறைந்ததால் தொழிலும் மந்தமடைந்தது. அதனால், விங் சூன் யுவென் 1978-ல் நியூ பிரிட்ஜ் சாலைக்கு இடம்பெயர்ந்து, சீனப் பெயருடன் “ஸ்பிரிங் கோர்ட்” என்ற பெயரையும் சேர்த்துக் கொண்டது. முடிவில், 2004-ல் அப்பர் கிராஸ் சாலை க்கு உணவகம் மாறிச்சென்றது.

சிங்கப்பூரிலுள்ள பல சீனக் குடும்பங்களுக்கு, சீனப் புத்தாண்டை ஸ்பிரிங் கோர்ட்டில் கொண்டாடுவது வருடாந்தரப் பாரம்பரியமாக இருக்கிறது. இன்று, ஹோ குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினர் உணவகத்தை நடத்துகின்றனர். உள்ளூர் சீன உணவுப் பாரம்பரியத்தைக் காட்டிக்காப்பதோடு, இளைய தலைமுறையினருக்கு சிங்கப்பூர் பாணியிலான கென்டனீஸ் உணவு வகைகளையும் உணவகம் வழங்குகிறது.

 

பாரம்பரியத் தேநீர் விடுதியிலிருந்து ருசியான மாவுப்பலகாரங்கள் வரை: டொங் ஹெங்

வைர வடிவ முட்டை டார்ட் பலகாரத்திற்கு இன்று பெயர்பெற்று விளங்கும் டொங் ஹெங், போருக்கு முந்திய காலத்தில் ஹுவாங் ஹாவ் தேநீர் விடுதி என்ற பெயரில் முதன்முதலில் தொடங்கப்பட்டது.

சீனாவின் குவாங்டோங் மாநிலத்திலிருந்து 1910-களில் சிங்கப்பூருக்கு வந்த ஃபொங் சீ ஹெங் என்பவர், பல்வேறு தேநீர் விடுதிகளில் பானங்கள் விற்கும் நடமாடும் கடைக்காரராகத் தொடங்கினார். பல ஆண்டுகளாகப் பணம் சேமித்து, 1934-ல் ஸ்மித் சாலையில் இருந்த தேநீர் விடுதியை 1934-ல் வாங்கினார். அதன் பெயர் பிற்பாடு “டொங் ஹெங்” என மாற்றப்பட்டது.

போருக்கு முந்திய சைனாடவுனில், டொங் ஹெங் போன்ற தேநீர் விடுதிகள் கென்டனீஸ் கலாசாரச் சின்னமாகத் திகழ்ந்தன. வாடிக்கையாளர்கள் விடுதியில் ஒன்றுகூடி தேநீர் பருகி, பலகாரங்களை ருசித்தபடி, கலகலப்பாகப் பேசி மகிழ்வார்கள். லாய் சுன் யுவென் எனும் தெருக்கூத்து அரங்குக்கு எதிரே அமைந்திருந்த டொங் ஹெங்கில், ரசிகர்கள் தங்கள் மனங்கவர்ந்த நடிகர்களுக்காக இனிப்புப் பலகாரங்கள் வாங்குவார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சைனாடவுனில் இருந்த பல தேநீர் விடுதிகள், உணவகங்களாக மாறிக்கொண்டன. டொங் ஹெங் மாவுப்பலகாரங்கள் செய்யும் வழக்கத்தை விடாமல் தொடர்ந்தது. 1960-களில், வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காகப் பலவித வடிவங்களிலான முட்டை டார்ட் பலகாரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட பேழையைக் குடும்பத்தார் கடையில் நிறுவினார்கள். அந்த உத்தி மாபெரும் வெற்றி கண்டு, முட்டை டார்ட் பலகாரமும் பாரம்பரிய கென்டனீஸ் திருமணப் பலகாரங்களும் வழங்கும் கடையாக டொங் ஹெங் பிரபலமடைந்தது.

மறுமேம்பாட்டின் காரணமாக, 1980-களில் ஸ்மித் சாலையில் இருந்து டொங் ஹெங் வெளியேறி, தற்போதைய சவுத் பிரிட்ஜ் சாலைக்கு இடம்பெயர்ந்தது. இன்று, நான்காம் தலைமுறையினரால் நடத்தப்பட்டுவரும் டொங் ஹெங், சைனாடவுனின் தனித்துவச் சின்னமாகத் தொடர்ந்து விளங்குகிறது.

 

தணலில் வாட்டிய அழகிய, நறுமணமிக்க மாமிசம்: பீ செங் ஹியாங்

சைனாடவுனில் இருந்த முன்னாள் மெஜஸ்டிக் திரையரங்குக்கு அருகே பக் குவா (தணலில் வாட்டிய மாமிசத் துண்டுகள்) விற்கும் சாலையோரக் கடையாக பீ செங் ஹியாங் 1930-களில் தொடங்கியது. இந்தத் தொழிலை நிறுவிய டியோ சுவீ ஈ என்பவர், தமது முதல் கடையை ரோச்சோர் சாலையில் திறந்தார்.

அந்தத் தொழிலுக்கு “பீ செங் ஹியாங்” எனக் குடும்பத்தினர் பெயரிட்டனர். இந்தப் பெயரின் ஒவ்வொரு சீன எழுத்திலும் ஒன்பது கோடுகள் இருக்கும். சீனக் கலாசாரத்தில் நீண்ட ஆயுளை அவை குறிக்கின்றன. பக் குவாவை “அழகிய, நறுமணமிக்க சுவையுணவாக” விளம்பரப்படுத்தும் பீ செங் ஹியாங்கையும் அது பிரதிநிதிக்கிறது.

தொழில் நுணுக்கங்களில் வல்லமை பெற்று விளங்கிய டியோ, விளம்பர உத்திகளிலும் கைதேர்ந்தவராக இருந்தார். அந்தக் காலத்தில் “பீ சுன் ஹெங்” என்று எழுதப்பட்ட பீ செங் ஹியாங், 1950-களில் இருந்தே வாடிக்கையாக விளம்பரங்கள் வெளியிட்டது. வானொலி நிகழ்ச்சிகளுக்குப் பணம் செலவிட்டு, வர்த்தகக் கண்காட்சிகளிலும் பங்கெடுத்தது.

1970-களுக்குள், பீ செங் ஹியாங் விரிவடைந்து, நகர்ப் பகுதியில் பல கிளைகளை அமைத்திருந்தது. இந்த நியூ பிரிட்ஜ் சாலைக் கிளை, சைனாடவுனின் பிரசித்திபெற்ற கிளையாக விரைவில் உருவெடுத்தது. விழாக்காலங்களில் கட்டடத்தைச் சுற்றிலும் மக்கள் வரிசை நீண்டிருக்கும்.

பீ செங் ஹியாங் ஒரு பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருந்தாலும், கூடுமானவரை பாரம்பரியத் தயாரிப்பு முறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்கிறது. எடுத்துக்காட்டாக, மாமிசத் துண்டுகளை மூங்கில் தாம்பாளங்களில் கையால் அடுக்குகிறது. பாரம்பரியத்திற்குத் தரப்படும் இந்த முக்கியத்துவமே, நீண்டகால வாடிக்கையாளர்கள் கடைக்குத் திரும்பத் திரும்ப வருவதற்கான காரணமாக இருக்கிறது. அவர்கள் இளவயதில் ருசித்த பக் குவா, இன்றுவரை அதே சுவையில் அங்கு கிடைக்கிறது.  

 

தரமான தேநீரின் அடையாளச்சின்னம்: பெக் சின் சூன்

சிங்கப்பூரின் ஆகப் பழமையான தேநீர் வணிக நிறுவனங்களுள் ஒன்று பெக் சின் சூன். பாய்-ஜுவாங் டான் நியாங் என்பவர் தனது மகன் பெக் கிம் ஆவுடன் சேர்ந்து 1925-ல் தேநீர் வணிகத் தொழிலைத் தொடங்கினார்.

பெக்-கின் தந்தை காலமான பிறகு, சீனாவின் ஆன்சி மாநிலத்திலிருந்து 1910-ல் சிங்கப்பூருக்கு வந்தார் பாய்-ஜுவாங். மாமாவின் தேநீர்க் கடையில் மகன் வேலைக்குச் சேர்ந்து தொழிலைக் கற்றுக்கொள்ள முடியும் என்று அவர் நினைத்தார். தனது மாமாவின் கடையில் ஓரளவு அனுபவம் பெற்ற பிறகு, இந்தோனீசியாவில் கூலித் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார் பெக். பிறகு, சிங்கப்பூருக்குத் திரும்பிவந்து, சொந்தமாகத் தேநீர்த் தொழில் தொடங்கினார்.

வாடிக்கையாளர்களைப் பெறுவதற்காக, தோளில் சுமந்த கழியில் தேநீரை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்றார் பெக். நகர்ப் பகுதியில் தொழில் நடத்தியவர்களிடமும் குடியிருப்பாளர்களிடமும் தேநீரை விற்பனை செய்தார். 1925-ஆம் ஆண்டுக்குள், ஜார்ஜ் சாலையில் சொந்தக் கடை திறக்கும் அளவுக்குப் பணம் சேமித்துவிட்டார். தனது தேநீருக்கு எருமையைச் சின்னமாகத் தேர்ந்தெடுத்தார். விடாப்பிடியான பெக்கை அவரது சகாக்கள் “எருமைத் தலையன்” என்று பிரியமாக அழைத்தது இதற்குக் காரணம். காலப்போக்கில், தரமான தேநீர்க் கலவைகளுக்கு பெக் சின் சூன் நன்மதிப்பு பெற்றது. 

தரமான தேநீர்களின் அடையாளச்சின்னமாகத் திகழும் பெக் சின் சூனில், குடும்பத்தார், ஊழியர்கள் ஒவ்வொருவரும் தேநீர் தயாரிப்பு முறையை நன்றாகத் தெரிந்துகொள்வது கட்டாயம். 

இன்று நான்காம் தலைமுறையினரால் நடத்தப்படும் பெக் சின் சூன்,  உயர்தரச் சீனத் தேநீரின் மொத்த விற்பனையிலும் சில்லறை விற்பனையிலும் முன்னணி நிறுவனமாகத் தொடர்ந்து பெயர்பெற்று விளங்குகிறது. பிரத்யேகத் தேநீர்க் கலவைகளை நாடும் வாடிக்கையாளர்கள் இந்நிறுவனத்தைத் தேடிச் செல்கின்றனர்.

 

தரமான பொன்னகைக்குப் பெயர்பெற்ற பொற்கொல்லர்: டின் சிங் கோல்டுஸ்மித்

வோங், வான், சாவ் குடும்பங்கள் 1937-ல் நிறுவிய டின் சிங் நகைக்கடை, சவுத் பிரிட்ஜ் சாலையில் அமைந்திருக்கும் போருக்கு முந்திய கடைசி நகைக்கடைகளில் ஒன்று.


1970-கள் வரை, தங்கம் பாரம்பரிய சேமிப்பு முறையாகக் கருதப்பட்டது. டின் சிங் போன்ற நகைக்கடைகளில், சம்பள நாளன்று தங்கம் வாங்க வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் அடிக்கடி காணப்பட்டனர். டின் சிங் அதன் நகைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வதாக உத்தரவாதம் அளித்ததால், அது பிரபலமான கடையாகத் திகழ்ந்தது. அந்தக் காலகட்டத்தில், மிகச்சில நகைக்கடைகளே இத்தகைய உத்தரவாதத்தை வழங்கின.


தங்கத்தின் தரத்திற்கும் கைத்திறனுக்கும் பெயர்பெற்று விளங்கிய டின் சிங்கில், 1950-கள் முதல் 1970-கள் வரை சுமார் 20 திறன்மிகுந்த கைவினைஞர்கள் வேலை செய்தனர். டின் சிங்கின் கைத்திறனால் கவரப்பட்டு, அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் மனைவியர், அழகு ராணிகள், மற்றும் ஃபங் போ-போ, ஜென்னி செங், லீ லீ-ஹுவா போன்ற அனைத்துலக பிரபலங்கள் டின் சிங்குக்கு அடிக்கடி வருகையளித்தனர்.


பிரத்யேக நகைகளை வடிவமைத்துத் தரும் நகைக்கடையாகவும் டின் சிங் பிரபலமடைந்தது. இரு தூக்கனாங் குருவிகள் கூட்டுக்குத் திரும்புவதைக் காட்டும் தங்கப் பதக்கம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. ஹாங்காங் கென்டனீஸ் தெருக்கூத்து கலைஞர் செக் யின் சீ என்பவருக்கு அன்பளிப்பாக 1952-ல் ஒரு ரசிகர் இதனை வாங்கிக் கொடுத்தார். சிங்கப்பூர் சீன வர்த்தகத் தொழில் சபை, 1964-ல் சபையின் கட்டடத் திறப்புவிழாவில் அப்போதைய பிரதமர் லீ குவான் இயூ அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிய தங்கப் பதக்கமும் டின் சிங்கில்தான் செய்யப்பட்டது.


இன்று இரண்டாம் தலைமுறையினரால் நிர்வகிக்கப்படும் டின் சிங், நம்பகமான உள்ளூர் நகைக்கடையாக நீடித்து நிலைத்திருக்கிறது. சிறப்பு வைபவங்களுக்கு நகைகள் வாங்குவதற்காக அல்லது டின் சிங்கில் பிரத்யேக நகைகளை வடிவமைப்பதற்காகத் திரும்பிச்செல்லும் நீண்டகால வாடிக்கையாளர்களுக்கு, இந்த நகைக்கடை தொடர்ந்து சேவை வழங்குகிறது. 

 

நம்பிக்கைக்குரிய மருந்துத் தைலங்களும் களிம்புகளும்: சாப் வா ஆன்

டொங் சீ லியோங் என்பவர் 67 பகோடா சாலை எனும் முகவரியில் 1916-ல் தொடங்கிய சாப் வா ஒன், சிங்கப்பூரின் ஆகப் பழமையான மருந்துத் தைல, களிம்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.

தரமான, அதே சமயத்தில் மலிவான தயாரிப்புகளுக்குப் பெயர்பெற்று விளங்கிய சாப் வா ஆன், சீனாவுக்குத் திரும்பிச்சென்ற சீனக் கூலித் தொழிலாளிகளும் சம்சுய் பெண்களும் அன்பளிப்புகள் வாங்க நாடிச்சென்ற இடமாகத் திகழ்ந்தது. குறிப்பாக, அதன் செம்பூத் தைலம். டொங்கின் மூத்த மகன் டொங் செங் மன், 1940-களில் தொழிலுக்குப் பொறுப்பேற்று, உழைக்கும்வர்க்க வாடிக்கையாளர்களுக்காக விலைகளைத் தொடர்ந்து குறைவாகவே வைத்திருந்தார்.

இந்தக் கடை உள்ளூர் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமன்றி, சீனாவிலிருந்த வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்குகிறது. தலைமுறை தலைமுறையாக சீனாவுக்குத் திரும்பிச்சென்ற குடியேறிகள், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அன்பளிப்பாக எடுத்துச்சென்ற சாப் வா ஆன் தயாரிப்புகளால், சீனாவிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரபலமடைந்தன.

விலங்குப் பிரியரான டொங், 1960-கள் வரை பகோடா சாலை கடைவீட்டின் பின்பகுதியில் அயல்நாட்டு விலங்கு வர்த்தகத்தையும் நடத்தி வந்தார். ஆய்வுக் கழகங்களுக்கும் வெளிநாடுகளிலிருந்த விலங்கியல் தோட்டங்களுக்கும் அவர்கள் விலங்குகளை விநியோகம் செய்தார். டொங்கின் நண்பரும் விலக்குப் பிரியருமான ஜோகூர் சுல்தான் இஸ்மாயில், விலங்குகளைப் பார்ப்பதற்காகப் பல முறை மாறுவேடத்தில் கடைவீட்டுக்கு வருகை அளித்ததாக டொங்கின் குடும்பத்தார் நினைவுகூர்ந்தனர். 1957-ல், பாசிர் பாஞ்சாங்கில் விலங்கியல் தோட்டத்தைத் திறந்தார் டொங். நெதர்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட கடல்சிங்கமும் அங்கு இருந்தது. 

சாப் வா ஆன் 2000-ஆம் ஆண்டில் அப்பர் கிராஸ் சாலைக்கு மாறிச்சென்றது. தற்போது டொங் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையினர் தொழிலை நடத்தி வருகின்றனர். இதன் தயாரிப்புகளின் மருத்துவக் குணங்களைப் போற்றிப் பாராட்டும் பல தலைமுறை வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் விசுவாசமும் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. 

 

பாரம்பரிய நகைகள் முதல் நேர்த்தியான நகைகள் வரை: ஆன் சியோங் ஜுவல்லரி

கைத்திறனுக்கும் தனித்துவமான நகைகளுக்கும் பெயர்பெற்று விளங்கும் ஆன் சியோங் நகைக்கடை, 1936-ல் ஹோ இயூ பிங் என்பவரால் நிறுவப்பட்டது. சீனாவின் குவாங்டோங் மாநிலத்திலிருந்து 1925-ல் குடிபெயர்ந்த ஹோ, மலாயாவில் பல்வேறு பொற்கொல்லர்களிடம் பயிற்சிபெற்ற பிறகு சிங்கப்பூரில் குடியேறினார்.

ஹோ தனது நண்பர்களுடன் சேர்ந்து நார்த் பிரிட்ஜ் சாலையில் முதல் கடையைத் திறந்தார். “ஆன் சியோங்” எனப் பெயரிடப்பட்ட அந்தக் கடையில், வெள்ளி, தங்க நகைகள் விற்கப்பட்டன. கென்டனீஸ் மொழியில் “அமைதியும் செழிப்பும்” என்ற அர்த்தம் கொண்ட கடைப்பெயர், நிச்சயமற்ற அந்தக் காலக்கட்டத்தில் குடியேறிகளின் மனதில் குடிகொண்டிருந்த ஆசைகளைப் பிரதிபலித்தது.

1941-ல், ஆன் சியோங் கடையை 251 சவுத் பிரிட்ஜ் சாலை முகவரிக்கு இடம் மாற்றினார் ஹோ. சைனாடவுனில் மக்கள்தொகை அதிகமாக இருந்ததால் அதிகமான வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என அவர் நம்பினார். கென்டனீஸ் இனப்பிரிவைச் சேர்ந்த யோ, கென்டனீஸ் வாடிக்கையாளர்கள் அதிகமாக இருந்த வட்டாரத்தில் தொழில் செய்வது சுலபமாக இருக்கும் என்றும் நினைத்தார்.

1990-கள் வரை, சேமிப்பாகத் தங்கம் வாங்கிய வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்குரிய நகைக்கடையாக ஆன் சியோங் விளங்கியது. ஆனால், அதிகமான சிங்கப்பூரர்கள் தனிப் பயன்பாட்டுக்காக நகைகள் வாங்கத் தொடங்கியதால், நிறுவனரின் கடைசி மகன் ஹோ நய் சுவென் நவீனமயமாகத் தீர்மானித்து, அரிய சீனப் பச்சைக்கற்களையும் பிரத்யேகமாக வடிவமைத்துத் தரப்படும் நகைகளையும் வழங்கத் தொடங்கினார்.

நேர்த்தியான நகைகளின் புகலிடமாக இன்று திகழும் ஆன் சியோங், தனித்துவ ஆபரண வடிவமைப்புகளையும் நுட்பமாக உருவாக்கப்பட்ட நகைகளையும் வழங்கி வாடிக்கையாளர்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.

 

வேர்க்கடலை முதல் பாரம்பரியத் தின்பண்டங்கள் வரை: மெய் ஹியோங் யுவென்

பாரம்பரியத் தின்பண்டங்களுக்கு நன்கறியப்பட்ட மெய் ஹியோங் யுவென் (கென்டனீஸ் மொழியில் “நறுமணத் தோட்டம்” என்று அர்த்தம்), ஆரம்பத்தில் வறுத்த வேர்க்கடலை உற்பத்தியாளராகத் தொடங்கிய விவரம் பலருக்கும் தெரியாதிருக்கலாம்.


இந்தத் தொழிலைத் தொடங்கிய லீ சிட் ஹெங் என்பவர், ஈப்போவின் மெங்லெம்பூ வட்டாரத்தில் வறுத்த வேர்க்கடலை தொழில்துறையில் வேலை செய்தவர். அவர் 1940-களில் சிங்கப்பூரில் குடியேறி, மெய் ஹியோங் யுவென் நிறுவனத்தை அமைத்தார். ஆரம்பத்தில் பகோடா சாலையில் மெங்லெம்பூ வேர்க்கடலைகளை விற்பனை செய்த மெய் ஹியோங் யுவென், பிற்பாடு 39 டெம்பல் சாலை எனும் முகவரிக்கு மாறிச்சென்றது.


விவசாயி (“ஃபார்மர்”) வர்த்தகச்சின்னத்துடன், மெய் ஹியோங் யுவென் உள்ளூர் சில்லறை விற்பனையாளர்களுக்கும் உணவகங்களுக்கும் வேர்க்கடலைகளை விநியோகம் செய்தது. புதிதாக வறுக்கப்பட்ட வேர்க்கடலைகள், டெம்பல் சாலையில் எடைப்போட்டு விற்கப்பட்டன. 1970-களுக்குள், வட்டார நாடுகளுக்கும், ஹாங்காங், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் வேர்க்கடலைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. 1990-களிலும் ஏற்றுமதி தொடர்ந்து செழிப்பாக இருந்தபோதிலும், சந்தையில் புதுவிதமான பல்வேறு தின்பண்டங்கள் அறிமுகமானதால், டெம்பல் சாலை கடை கடுமையான போட்டியை எதிர்நோக்கியது.


இந்நிலையில் தொழில் விருத்திக்காகவும், சைனாடவுனில் மெய் ஹியோங் யுவெனை நிலைநாட்டவும், லீயின் மகள்கள் கிளாரா, கோனி இருவரும், 67 டெம்பல் சாலை எனும் முகவரியில் அமைந்திருந்த குடும்பக் கடையில் பாரம்பரிய கென்டனீஸ் தின்பண்டங்களை விற்கும் யோசனையைச் செயல்படுத்தினர்.


அந்தத் தொழில் வெற்றியடைந்து, தீவின் பல்வேறு பகுதிகளுக்கு மெய் ஹியோங் யுவென் விரிவடைந்தது. இருந்தாலும் பாரம்பரியத்தை மறக்காமல், தங்களது தின்பண்டக் கடைகளில் சிலவற்றில் விவசாயி வர்த்தகச்சின்ன வேர்க்கடலைகளை இன்றுவரை விற்கின்றனர்.

 

 
close button
hhlogo